Friday, 16 December 2011

பென்டாஸ்டிக் என்றார் ரஜினி, பையன் ஃபுல் பார்ம்ல இருக்கான் என்றார் கமல்- சூர்யா பெருமிதம்


7ஆம் அறிவு படத்தைப் பார்த்த ரஜினி சார் படம் பார்த்து விட்டு வெளியே வரும்போது என்னைக் கட்டிப்பிடித்து பென்டாஸ்டிக் என்று கூறி வாழ்த்தினார். கமல்சார், படம் பார்த்துக் கொண்டிருந்தபோதே, பையன் ஃபுல் பார்ம்ல இருக்கான் என்று பாராட்டியதாக வைரமுத்து சார் சொன்னார் என்று கூறியுள்ளார் நடிகர் சூர்யா.

சூர்யா - ஸ்ருதி ஹாஸன் நடிப்பில் ஏ ஆர் முருக தாஸ் இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியான படம் ஏழாம் அறிவு. இந்தப் படம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் வந்தாலும், படம் பெரிய அளவு வசூலைக் குவித்துள்ளதாக தயாரிப்பாளர் உதயநிதியும் இயக்குநர் முருகதாஸும் அறிவித்துள்ளனர்.

வெளிநாடுகளில் இந்தப் படத்துக்கு சிறப்பான வரவேற்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.

இந்த நிலையில் படத்தின் வெற்றி மற்றும் பாராட்டுகளைப் பகிர்ந்து கொள்ள நேற்று சென்னையில் நிருபர்களைச் சந்தித்தார் படத்தின் நாயகன் சூர்யா. 

படம் வெளியான பிறகு தனக்குக் கிடைத்த பாராட்டுகளைப் பற்றி அவர் கூறுகையில், "7ஆம் அறிவு படம் உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடுகிறது. தமிழறிஞர்கள், உணர்வாளர்கள், வெளிநாடு வாழ் தமிழர்கள், மாற்று சினிமா ரசிகர்கள் என அனைவருமே இந்தப் படத்தை பாராட்டினர்.

இந்தப் படத்துக்கு எதிர்மறை விமர்சனங்களும் வந்துள்ளன. பாராட்டுக்களை ஏற்கும் அதே மனப்பான்மையுடன் விமர்சனங்களையும் தலை வணங்கி ஏற்கிறேன். 

சமீபத்தில் திரையுலகைச் சேர்ந்த ஒரு முக்கிய பிரமுகர் பேசுகையில், "நான் படம் பார்த்தேன். சிலர் விமர்சித்த மாதிரி அப்படி ஒன்றும் தவறாக இந்தப் படம் இல்லையே. நன்றாக இருந்ததே..." என்று கேட்டார். அவரவர் பார்வையைப் பொறுத்துதான் எதுவும் இருக்கிறது.

இன்னும் கூட வெளியூர்களில் டிக்கெட் கிடைக்காத அளவுக்கு நல்ல வசூலுடன் படம் ஓடிக் கொண்டிருக்கிறது. எனது தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் மகிழ்ச்சியாக உள்ளார்.

நான் நடித்த படங்களிலேயே சிங்கம்தான் அதிகம் வசூல் ஈட்டியது. இப்போது அந்த வசூலை 7ஆம் அறிவு படம் பத்து நாட்களில் தாண்டி சாதனை படைத்துள்ளது. இதற்கு காரணமான இயக்குநர் முருகதாஸுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என் கேரியரில் மறக்க முடியாத படமாக அமைந்துள்ளது ஏழாம் அறிவு.

தங்கர் பச்சான் சொன்னமாதிரி, குறையுள்ளவன்தான் மனிதன். அந்த மனிதன் படைத்த படைப்பிலும் குறைகள் நேர்வது சகஜம். அதைப் பொறுத்துக் கொண்டு ஆதரவளித்தால் மேலும் நல்ல படைப்புகள் தர உத்வேகம் பிறக்கும். நிச்சயம் இப்போது அனைவரும் சுட்டிக் காட்டியுள்ள குறைகளை அடுத்தபடத்தில் இல்லாத அளவுக்கு பார்த்துக் கொள்வேன்," என்றார்.

தொடர்ந்து அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும்:

ரஜினி, கமல் படம் பார்த்தார்களே என்ன சொன்னார்கள்...?

நாங்கள் இந்தப் படத்தை ரஜினி சாருக்கு போட்டுக் காட்ட விரும்பி, நேரில் அழைத்தோம். சார் உடனே பார்க்க வருவதாகச் சொன்னார். சொன்ன நேரத்துக்கு ஷார்ப்பாக வந்தார். படம் பார்த்துவிட்டு அவர் வெளியில் வரும்போது நிறைய கூட்டம். என்னைக் கட்டிப்பிடித்து கட்டிபிடித்து பென்டாஸ்டிக் என்று கூறி வாழ்த்தினார். ரொம்ப கடுமையான முயற்சி எடுத்து செய்துள்ளீர்கள் என்றார்.

கமல் சார் படம் பார்த்துக் கொண்டிருந்த போதே, பையன் ஃபுல் பார்ம்ல இருக்கான் என்று பாராட்டியதாக வைரமுத்து சார் சொன்னார். நான் கமல் சாரை நேரில் பார்த்தபோது, இது பற்றிக் கேட்டேன். அவர், உண்மையைச் சொன்னதாக கூறினார். அந்தப் பாராட்டு எனக்கு பெரிய கவுரவமாக இருந்தது. 

சிவகுமார் பார்த்துவிட்டு என்ன கருத்து சொன்னார்?

பொதுவாக என் தந்தை என் நடிப்பைப் பற்றி எதுவும் என்னிடம் நேரில் சொன்னதில்லை. இப்போது நான் புது வீடு கட்டி வருகிறேன். இதனால் தற்காலிகமாக பெசன்ட் நகரில் வசிக்கிறேன். படம் பார்த்த உடன் என் தந்தை சிவகுமார் அந்த வீட்டுக்கு வந்தார். என்னை கட்டிப்பிடித்து கண்கலங்கினார். அது அப்பா எனக்கு கொடுத்த பெரிய பாராட்டு. 

கமல் மகள் ஸ்ருதிக்கு உங்களை விட வலுவான கேரக்டர் என்பது தெரிந்தேதான் நடித்தீர்களா...

இந்தக் கதை ஆரம்பத்திலேயே எனக்கு சொல்லப்பட்டுவிட்டது. இதில் முக்கிய பாத்திரமான போதி தர்மனாக நடித்ததும் நான்தானே. இரண்டாம் பாகத்தில் ஸ்ருதிக்கு முக்கியத்துவம் இருந்தது. கதை அவர்மீதுதான் செல்லும். கதை அப்படி. ஆனால் ஒவ்வொரு கேரக்டருக்கும் என்ன தேவையோ அதை இயக்குனர் கொடுத்து இருக்கிறார் முருகதாஸ். 

இவ்வளவு வலுவான கேரக்டரை ஸ்ருதி சரியாகச் செய்தார் என்று கூற முடியுமா...?

அவருக்கு ஆரம்பப் படம் இது. அப்படிப் பார்த்தால், 13 ஆண்டுகளுக்கு முந்தைய நான்கூட மூட்டையைக் கட்டியிருக்க வேண்டும். இந்தப் படத்தில் ஸ்ருதி ஆர்வத்துடன் வேலை பார்த்தார். அவரது நடிப்பில் குறைகள் இருந்தாலும், முதல் படம் என்ற வகையில் அவரது ஆர்வமும் உழைப்பும் பாராட்டுக்குரியவை. 

கமல் மகள் என்பதால் பயந்து நடித்தீர்களா?

கமல் சார் மகள் என்பதால் முதல் மூன்று நாட்கள் கொஞ்சம் தயக்கமாகத்தான் இருந்தது. அவர் நடந்து வந்தாலே கமல்சார் வந்த மாதிரி இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அந்த உணர்வுகளில் இருந்து மீண்டு வந்தேன். பின்னர் இயல்பாகிவிட்டோம். 

போதி தர்மரை ஏன் தமிழருக்கு தெரிய வேண்டும்? அவர் தமிழருக்கு எதுவுமே செய்யவில்லையே? அவரைப் பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்?

நமக்கு என்ன செய்தார் என்று ஏன் பார்க்க வேண்டும்... உலகத்துக்கே பெரும் நன்மை செய்த ஒரு தமிழராயிற்றே. அப்படிப் பார்க்கலாமே!

போதி தர்மர் தமிழரே இல்லை என்கிறார்களே...

அவர் பல்லவ வம்ச இளவரசர். காஞ்சிபுரத்திலிருந்து போனவர். அப்படியென்றால் அவர் தமிழர்தானே. இதனை பல தமிழறிஞர்கள், ஆய்வாளர்களும் ஒப்புக் கொண்டு, அவர்தகள் ஆலோசனைப்படிதான் இயக்குநர் முருகதாஸ் படமாக்கினார். மேலும் விவரங்கள் வேண்டுமென்றால் முருகதாஸைத்தான் கேட்க வேண்டும்.

ஆனால் ஒன்று, கதைப்படி போதிதர்மரை சீனாவிலும், ஜப்பானிலும் தெய்வமாக கும்பிடுகிறார்கள். தற்கால தமிழ் இளைஞர்கள் சிந்தனை வேறு மாதிரி போகிறது. அவர்களை நமது பழைய கலாச்சாரத்துக்கு இழுத்து வர இப்படம் பயன்பட்டுள்ளது. 

இலங்கையில் இந்தப் படத்தின் முக்கியமான வசனங்களை வெட்டிவிட்டார்களே. நீங்கள் சொல்ல நினைத்தது மக்களைச் சேர்ந்ததா?

நாம் ஒரு விஷயத்தைச் சொல்கிறோம். அரசாஙக்கத்தை எதிர்த்து சண்டை போடவில்லை. இந்த வசனங்களை வெட்டினாலும் நாங்கள் சொல்ல நினைத்தது மக்களைச் சென்று சேர்ந்துவிட்டது. 

வேலாயுதம் படம் பார்த்தீர்களா?

இல்லை. இன்னும் பார்க்கவில்லை. 

உங்கள் படத்தை விஜய் பார்த்துவிட்டாரா?

தெரியவில்லை. அவர் மனைவிக்கு ஜோ படம் போட்டுக் காண்பித்தார்.

உங்கள் அடுத்த படம்?

மாற்றான். கே வி ஆனந்த் இயக்கத்தில் வெளியாக உள்ளது. இந்தப் படம் ஆக்ஷன் பொழுதுபோக்கு வகை. ஏழாம் அறிவை விட பெரிய ரேஞ்சுக்கு இந்தப் படம் வரும் என நம்புகிறேன்.

சிங்கம் பாகம் 2 பற்றி...

பேசிக் கொண்டிருக்கிறோம். ஓரிரு வாரங்களில் உங்களுக்கு முழுமையான செய்தி வரும்.

மீண்டும் சரித்திரக் கதையில் நடிக்கும் எண்ணம் உள்ளதா?

சரித்திரக் கதைகள் என்று வரும்போது, நிறைய முயற்சி, காலம் தேவை. அதைவிட முக்கியம் வலுவான சரியான கதை அவசியம். என்னிடம் சமீபத்தில் ஒரு பிரபல இயக்குநர் 17-ம் நூற்றாண்டு கதையைச் சொன்னார். ரொம்ப அற்புதமாக இருந்தது அதன் முதல்பாதி. அடுத்த பகுதி ஸ்க்ரிப்ட் தயாராகிக் கொண்டிருக்கிறது. சரியாக வந்தால், அந்தப் படத்தையெடுக்க தயாரிப்பாளர் முன்வந்தால் நிச்சயம் நடிப்பேன். 

விஜய் ரசிகர் மன்றத்துக்கு கொடி இருப்பது போல் உங்கள் ரசிகர்களுக்கு கொடி கொடுப்பீர்களா? 

ஏங்க... நல்லாதானே இருக்கு இப்ப. கொடி வைத்து ரசிகர் மன்றத்தை வளர்க்கும் எண்ணம் எனக்கு இல்லை!

-இவ்வாறு சூர்யா பேட்டியில் குறிப்பிட்டார்.

இந்தப் பேட்டியின் போது ஒரு நிருபர், நீங்களும் விஜய்யும் உங்கள் கதைகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதுண்டா என்று கேட்டார். உடனே சூர்யா.. இல்லையே.. ஏன்? என்றார்.

இல்ல.. வேலாயுதத்துல அவர் பாகிஸ்தான் தீவிரவாதி கூட சண்டை போடுகிறார், ஏழாம் அறிவில் நீங்கள் சீனாக்காரர்களுடன் சண்டை போடுகிறீர்கள். இதனால் பக்கத்து நாடுகளுடன் பெரும் பிரச்சினையாகிவிடும் போலிருக்கிறதே, என்று கூற வாய்விட்டுச் சிரித்தார் சூர்யா. இதனால் அரங்கமே சிரிப்பில் குலுங்கியது!

0 comments:

Post a Comment

 
Related Posts Plugin for WordPress, Blogger...