Wednesday, 7 March 2012

கோவில்பட்டியில் ஆவணமின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.50,000 பறிமுதல்

கோவில்பட்டி: கோவில்பட்டியில் நடத்தப்பட்ட வாகன சோதனையின்போது உரிய ஆவணமின்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.50,000 ரொக்கத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். 

சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு நெல்லை மாவட்டம் மட்டுமின்றி தூத்துக்குடி மாவட்டத்திலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இதனால் பணப்பட்டுவாடாவை தவிர்க்க தூத்துக்குடி மாவட்டத்திலும் பல இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் கோவில்பட்டி பஸ் நிலையம் அருகே இளையரசனேந்தல் ரோட்டில் பறக்கும் படை துணை தாசில்தார் முருகானந்தம் தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கொப்பையா, ஞானசிகாமணி, போலீசார் மணிமேகலா, சேவியர், மகேந்திரன், மாதேஸ்வரன் உள்ளிட்டோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இருந்து திருவேங்கடம் நோக்கி வந்த ஒரு காரை பறக்கும் படையினர் தடுத்தி நிறுத்தி சோதனை செய்தனர். 

அப்போது அந்த காரில் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் சுப்புராஜ் தகுந்த ஆவணங்கள் இல்லாமல் ரூ.50,000 கொண்டு சென்றது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து திருவேங்கடம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

0 comments:

Post a Comment

 
Related Posts Plugin for WordPress, Blogger...