Wednesday, 7 March 2012

இடைத்தேர்தல்: சங்கரன்கோவிலில் இதுவரை ரூ.38.21 லட்சம் பறிமுதல்

சங்கரன்கோவில்: இடைத்தேர்தல் நடக்கவிருக்கும் சங்கரன்கோவிலில் இதுவரை ரூ.38.21 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சங்கரன்கோவில் தொகுதியில் இடைத்தேர்தலை முன்னிட்டு பறக்கும் படையினர், கண்காணிப்பு குழுக்கள் முலம் பணப்பட்டுவாடா நடப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று காலை 7.30 மணிக்கு சங்கரன்கோவில் தாலுகா நடுவப்பட்டியில் விளாத்திகுளம் துணை தாசில்தார் சேதுராமன் தலைமையிலான பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மாருதி ஓம்னி வேனை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.2 லட்சத்து 21ஆயிரம் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

இதே போன்று அய்யனேரி கிராமத்தில் கோவில்பட்டி துணை தாசில்தார் முருகானந்தம் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது சு்ப்புராஜ் என்பவரது வாகனத்தில் ஆவணங்கள் இன்றி ரூ.50,000 எடுத்து சென்றது தெரிய வந்தது. அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் சங்கரன்கோவில் தாலுகா அலுவலகம் முன்பு தனி தாசில்தார் உமா மகேஸ்வரி தலைமையிலான குழுவினர் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த லோடு ஆட்டோவில் தேமுதிக பிரச்சார விளம்பரங்கள் அடங்கிய ரூ. 1 லட்சத்து 24 ஆயிரத்து 5 மதிப்புள்ள போஸ்டர்கள் கைப்பற்றப்பட்டன. சங்கரன்கோவில் தொகுதியில் இதுவரை ரொக்கமாக ரூ.38 லட்சத்து 21 ஆயிரத்து 760ம், ரூ.3 லட்சத்து 64 ஆயிரத்து 336 மதிப்புள்ள பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

0 comments:

Post a Comment

 
Related Posts Plugin for WordPress, Blogger...