Wednesday, 7 March 2012

'எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால்'!!

Game Show


கேள்வி 1:

இவற்றில் ஒருவர் செய்வதைப் பார்த்து மற்றவர் அப்படியே செய்வதை எப்படிக் குறிப்பிடுவீர்கள்?

நாய் அடிச்சான் காப்பி
கொசு அடிச்சான் காப்பி
ஈயடிச்சான் காப்பி
பேய் அடிச்சான் காப்பி

கேள்வி 2:

ஒரு உணவின் பெயர் கொண்ட பண்டிகை எது?

ஏகாதசி
பொங்கல்
விநாயக சதுர்த்தி
மெதுவடை

-இந்தக் கேள்வி பதில்களைப் படித்ததும், என்னய்யா கிண்டலா என கடுப்பாக உங்களுக்குள் கேள்வி எழுந்தால்... அதை அப்படியே கேம்ஷோ நடத்தும் தனியார் தொலைக்காட்சிகள் பக்கம் திருப்பிவிடுங்கள்!.

'எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால்' என்று மயிலாசாமியிடம் விவேக் நடத்திய கேம்ஷோவை விட 'மகா அறிவாளித்தனமான' கேள்விகள் கேட்கப்படுவது தான் கோபத்தை வரவழைக்கிறது. மக்களை முன்னேறவே விட மாட்டார்கள் போலிருக்கிறது.

கேள்விகள் கேனத்தனமாக இருக்கிறதே என்று நக்கலடித்தபடி, அடுத்த வேலைக்கு போய்விட்டால், நாம் முட்டாள்கள். அதற்குள் உள்ள மோசடியைப் புரிந்து கொண்டால், இந்த மாதிரி நிகழ்ச்சி நடத்துபவர்களை முட்டாளாக்க ஒரு வாய்ப்பாவது உண்டாகும்.

இது போன்ற கேள்வி- பதில் நிகழ்ச்சியின் பின்னால் விளையாடுகிறது பல கோடி ரூபாய் மக்கள் பணம்.

எப்படி... எல்லாம் பார்வையாளர்கள் மற்றும் ஆர்வக் கோளாறு நேயர்கள் மூலம்தான்.

இந்த கேம் ஷோவில் கலந்து கொள்ள ஒரு எஸ்எம்எஸ் போட்டி வைத்தார்கள். அந்த போட்டிக்கு இங்கே நீங்கள் படித்ததை விட கேவலமான ஏழு கேள்விகளை, ஏழு நாள் கேட்டிருந்தனர். ஒவ்வொரு நாளும் பல லட்சம் எஸ்எம்எஸ்கள். அதாவது ஒருவர் ஒரு எஸ்எம்எஸ் அனுப்பினால் போதாது... இரண்டு அனுப்ப வேண்டும்.

அப்படி அனுப்பியதில் கிட்டத்தட்ட 5 கோடி எஸ்எம்எஸ் குவிந்ததாகச் சொல்கிறார்கள். ஒரு எஸ்எம்எஸ்ஸுக்கு குறைந்தது ரூ 6 முதல் 9 வரை சார்ஜ் பண்ணுகின்றன மொபைல் நிறுவனங்கள்.

இப்போது கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள். சராசரியாக ரூ 6 என்று வைத்துக் கொண்டால்கூட, எஸ்எம்எஸ் மூலம் மட்டுமே ரூ 30 கோடியை சம்பாதித்திருக்க முடியும். இது தவிர, ஸ்பான்ஸர்கள், விளம்பரதாரர்கள் தரும் பல கோடி ரூபாய்கள்...

ஒரு டிவி இந்த நிகழ்ச்சியை அறிவித்து கல்லா கட்டியதைக் கண்டதும், இன்னொரு முன்னணி டிவியும் ஒரு கோடி என்ற மயக்க பிஸ்கட்டை மக்கள் முன் நீட்ட ஆரம்பித்துள்ளது.

இது வர்த்தகம்தான் என்றாலும்... மிக சாமர்த்தியமாக மக்களைச் சுரண்டும் தந்திரம் என்பதே பல சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

இந்த நிகழ்ச்சியை அனுமதிக்கும் அரசு, ஆன்லைன் லாட்டரிகள், ஒரு நம்பர் லாட்டரி, லாட்டரிச் சீட்டுகள், மூணு சீட்டு என பல்வேறு வகை சூதாட்டங்களையும் தாராளமாக அனுமதிக்கலாமே. பணம் சம்பாதிக்கும் குறுக்கு வழிகளில் இவையும் அடங்கும்தானே, என கோபக் கேள்விகள் எழுந்துள்ளன.

அரசின் 'கொர்ர்' தொடருமா, கலையுமா?

0 comments:

Post a Comment

 
Related Posts Plugin for WordPress, Blogger...