Friday 25 May 2012

டெல்லி டேர்டெவில்ஸ் 86 ரன்களில் தோல்வி-பைனலில் நுழைந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்

Ipl 5 Semifinal Chennai Super Kings Vs Delhi Daredevils


சென்னை: ஐபிஎல் 5 தொடரின் இறுதிப் போட்டிக்கான தகுதிப் போட்டியில் 223 ரன்கள் என்ற இமாலய வெற்றி இலக்கை விரட்டிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி 16.5 ஓவர்களில் 136 ரன்களில் சுருண்டது. இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் 86 ரன்களில் வெற்றிப் பெற்று, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

ஐபிஎல் 5 தொடரின் இறுதிப் போட்டிக்கான தகுதிப் போட்டி நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் டெல்லி டேர்டெவில்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. போட்டியின் டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு துவக்க வீரர் முரளி விஜய் முதல் ஓவரிலேயே 2 பவுண்டரிகளை அடித்து அதிரடி துவக்கம் அளித்து 28 பந்துகளில் அரைசதம் கடந்தார். ஆனால் அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து பொறுமையாக ஆடிய மைக்கேல் ஹஸ்ஸி 20 ரன்களில் ஓஜாவிடம் கேட்சாகி வெளியேறினார்.

அதன்பிறகு வந்த சுரேஷ் ரெய்னா 17 பந்துகளில் 1 சிக்ஸ், 3 பவுண்டரிகள் அடித்து 27 ரன்களில் பவான் நிகியின் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட்டானார். அடுத்து வந்த கேப்டன் டோணி 10 பந்துகளில் 2 சிக்ஸ், 1 பவுண்டரிகள் அடித்து 23 ரன்களை எடுத்து வரூண் ஆரோன் பந்தில் அவுட்டானார்.

விக்கெட்கள் ஒருபுறம் சரிந்து கொண்டிருக்க துவக்க வீரர் முரளி விஜய் தொடர்ந்து அதிரடியாக ஆடி 51 பந்துகளில் சதமடித்தார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆல்பி மார்கல் டக் அவுட்டாக, கடைசிக் கட்டத்தில் பிராவோ 12 பந்துகளில் 2 சிக்ஸ், 3 பவுண்டரிகள் அடித்து 33 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார்.

கடைசி பந்தில் ரன் அவுட்டான துவக்க வீரர் முரளி விஜய் 58 பந்துகளில் 4 சிக்ஸ், 15 பவுண்டரிகள் அடித்து 113 ரன்கள் எடுத்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்களை இழந்து 222 ரன்கள் குவித்தது.

223 ரன்கள் எடுத்த வெற்றிப் பெறலாம் என்ற இமாலய ஸ்கோரை விரட்டிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி துவக்கம் முதலே திணறியது. துவக்க வீரர் டேவிட் வார்னர் 3 ரன்கள் எடுத்த நிலையில் முரளி விஜய்யிடம் கேட்சாகி வெளியேறினார்.

அடுத்து வந்த கேப்டன் ஷேவாக் 1 ரன் மட்டுமே எடுத்து ஹஸ்ஸிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அதிரடியாக ஆடி வந்த ரோஸ் டெய்லர் 14 பந்துகளில் 2 சிக்ஸ், 1 பவுண்டரி அடித்து 24 ரன்களில் சுரேஷ் ரெய்னாவிடம் கேட்சாகி வெளியேறினார். விக்கெட்கள் ஒருபுறம் சரிய பொறுப்பாக ஆடி வந்த துவக்க வீரர் ஜெயவர்த்தனே அரைசதம் கடந்து ஆறுதல் அளித்தார்.

ரஸல்(16), நாமன் ஓஜா(7) என்று அடுத்தடுத்து விக்கெட்கள் சரிய, அரைசதம் கடந்த ஜெயவர்த்தனே 55 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வினிடம் போல்டானார். அதன்பிறகு வந்த சன்னி குப்தா(0), உமேஷ் யாதவ்(1), வரூண் ஆரேன்(0) என்று வரிசையாக விக்கெட்கள் வீழ்ந்தன.

16.5 ஓவர்களில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 136 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 86 ரன்களில் அபார வெற்றிப் பெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் அஸ்வின் அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

தகுதி போட்டியில் அபார வெற்றிப் பெற்றதன் மூலம் நாளை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடனான இறுதிப் போட்டியில் மோத சென்னை சூப்பர் கிங்ஸ் தகுதிப் பெற்றது.

0 comments:

Post a Comment

 
Related Posts Plugin for WordPress, Blogger...