Friday 25 May 2012

வெற்றிக்கு உதவிய பத்ரிநாத்-ஹசி * பிளமிங் பாராட்டு

வெற்றிக்கு உதவிய பத்ரிநாத்-ஹசி * பிளமிங் பாராட்டு

பெங்களூரு:மும்பை அணிக்கு எதிராக பத்ரிநாத்-மைக்கேல் ஹசி ஜோடியின் பொறுப்பான ஆட்டம் வெற்றிக்கு வித்திட்டது, என, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.பெங்களூருவில் நடந்த ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரின் பிளே-ஆப் சுற்றின் இரண்டாவது போட்டியில், சென்னை அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது. சென்னை அணி ஒரு கட்டத்தில் 1.2 ஓவரில் ஒரு ரன்னுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இந்நிலையில் இணைந்த பத்ரிநாத் (47), மைக்கேல் ஹசி (49) ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 94 ரன்கள் சேர்த்து அணியை சரிவிலிருந்து மீட்டது. இதனால் பின்வரிசையில் களமிறங்கிய கேப்டன் தோனி (51), டுவைன் பிராவோ (33) அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 187 ரன்கள் பெற்றுத் தந்தனர்.இதுகுறித்து சென்னை அணியின் பயிற்சியாளர் பிளமிங் கூறியது: மும்பை அணிக்கு எதிராக வெற்றி பெற்று, பைனலுக்கான பந்தயத்தில் நீடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இப்போட்டியின் வெற்றிக்கு பத்ரிநாத், மைக்கேல் ஹசி அமைத்த கூட்டணி முக்கிய காரணம். இல்லையென்றால், சென்னை அணி 160 ரன்களுக்கும் குறைவாக தான் ரன் எடுத்திருக்க முடியும். இதனை மும்பை இந்தியன்ஸ் பேட்ஸ்மேன்கள் எளிதாக சேஸ் செய்திருப்பார்கள். இந்த ஜோடி, அணியை சரிவிலிருந்து மீட்க உதவியது மட்டுமல்லாமல், தோனி மற்றும் பிராவோவின் அதிரடி ஆட்டத்திற்கும் வழிவகுத்தது. இதனால் 187 ரன்கள் என்ற இமாலய இலக்கை பதிவு செய்து, மும்பை அணிக்கு மனதளவில் நெருக்கடி கொடுக்க முடிந்தது.தற்போது எங்கள் கவனம் முழுவதும் டில்லி அணிக்கு எதிராக இன்று நடக்கவுள்ள முக்கியமான போட்டியின் மீது உள்ளது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பைனலுக்கு முன்னேற முயற்சிப்போம். மும்பை அணிக்கு எதிராக விளையாடியது போல, இன்றும் விளையாடுவது எளிதான காரியமல்ல. இருப்பினும் முழுத்திறமையை வெளிப்படுத்தி போராடுவோம்.இவ்வாறு ஸ்டீவன் பிளமிங் கூறினார்.


0 comments:

Post a Comment

 
Related Posts Plugin for WordPress, Blogger...