சென்னை:சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், பார்வையாளர்களுக்காக புதிதாக கட்டப்பட்டுள்ள மூன்று கேலரிகளை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் பயன்படுத்துவதற்கு, ஒரு வார காலத்துக்கு தடையில்லை. இதற்கான உத்தரவை, சென்னை ஐகோர்ட் நேற்று பிறப்பித்தது.சேப்பாக்கம் ஸ்டேடியத்தில், பார்வையாளர்கள் அமர்ந்து கிரிக்கெட் போட்டியை பார்ப்பதற்காக, மூன்று கேலரிகள் புதிதாக கட்டப்பட்டுள்ளன. இதில் 13 ஆயிரம் பேர் அமரலாம். கேலரி கட்டுவதற்கான அனுமதி கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பில், கட்டி முடிக்கப்பட்டு விட்டது. இந்நிலையில், தி.நகரில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு சீல் வைக்கப்பட்ட போது, இந்த மூன்று கேலரிகளுக்கும் சீல் வைக்கப்பட்டது.ஐ.பி.எல்., அரையிறுதி போட்டி இன்றும், இறுதிப் போட்டி 27ம் தேதியும் சென்னையில் நடக்க உள்ளது. இதையடுத்து, திட்ட அனுமதி வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதால், மூன்று கேலரிகளையும் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் இதில் குறுக்கிட சி.எம்.டி.ஏ., சென்னை மாநகராட்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் ஐகோர்ட்டில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மனுத் தாக்கல் செய்தது.சி.எம்.டி.ஏ., தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், மூன்று கேலரிகளும், அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளன. அந்த கேலரிகள் இதுவரை பயன்படுத்தப்படவில்லை. கேலரிகளை பயன்படுத்துவதைப் பொறுத்தவரை, சி.எம்.டி.ஏ.,விடம் இருந்து திட்ட அனுமதிக்கான ஒப்புதலும், சென்னை மாநகராட்சியிடம் இருந்து கட்டட அனுமதியும் கிடைக்கும் வரை, மனுதாரர் காத்திருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.மனுவை விசாரித்த நீதிபதிகள் தனபாலன், மதிவாணன் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:மூன்று கேலரிகளையும் பயன்படுத்துவதில், சி.எம்.டி.ஏ., மற்றும் சென்னை மாநகராட்சி குறுக்கிட ஒரு வார காலத்துக்கு தடை விதிக்கப்படுகிறது. வரும் 25, 27ம் தேதிகளில் போட்டி நடக்க உள்ளதால், மூன்று கேலரிகளின் பாதுகாப்பு, பராமரிப்பு குறித்து, சென்னை மாநகராட்சிக்கு மனுதாரர் உத்தரவாதம் அளிக்க வேண்டும். தேவையான வரியையும் செலுத்த வேண்டும். இந்த உத்தரவு, இறுதி உத்தரவைப் பொறுத்து அமையும். விசாரணை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைக்கப்படுகிறது.இவ்வாறு டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.
0 comments:
Post a Comment