Friday 25 May 2012

எனக்குத்தான் வயசாகலையே, அடுத்த ஐபிஎல் தொடரிலும் ஆடலாம்- கங்குலி

Not 40 Yet Will Decide Play Ipl 6 Ganguly

கொல்கத்தா: எனக்கு 40 வயது கூட ஆகவில்லை. இதனால் அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாட கூட நான் தயாராக உள்ளேன் என்று புனே வாரியர்ஸ் இந்தியா அணியின் கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் முதல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக அறிமுகமானவர் செளரவ் கங்குலி. முன்னாள் இந்திய கேப்டனான இவர், சொதப்பலான ஆட்டம் காரணமாக அதன்பிறகு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் வாய்ப்பு கிடைக்காமல், புனே வாரியர்ஸ் அணிக்கு தாவினார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் புனே வாரியர்ஸ் அணியின் கேப்டன் யுவராஜ் சிங் உடல்நிலை குறைவு காரணமாக ஓய்வு அளிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக கங்குலி கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஐபிஎல் 5 தொடரின் துவக்கத்தில் அடுத்தடுத்து வெற்றிகளை பெற்று வந்த புனே வாரியர்ஸ் அணி, கடைசியில் தொடர் தோல்விகளை பெற்று, புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்துக்குப் போய் விட்டது.

ஐபிஎல் 5 தொடரில் புனே வாரியர்ஸ் லீக் போட்டிகளுடன் வெளியேறிய நிலையில், கங்குலிக்கு ஒரு போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டது. அவர் மீதான அதிருப்தி காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டதாக செய்திகள் பரவியது.

இந்த நிலையில் ஐபிஎல் 6வது தொடரில் விளையாட கூட தான் தயாராக இருப்பதாக, செளரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் 6வது தொடரின் போது நான் 40 வயது கூட கடந்திருக்கமாட்டேன். எனவே அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் நான் பங்கேற்பேன் என்று நம்புகிறேன். நானும் ஒரு மனிதன் என்பதால் எனக்கும் தோல்விகள் ஏற்படுவது சகஜம். எனவே எனது தோல்விகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பல அணியின் கேப்டன்களும் தோல்வியை சந்தித்து உள்ளனர்.

அணியில் உள்ள 23 அல்லது 24 வயதுள்ள இளம் வீரர்களை போல என்னால் செயல்பட முடியாது என்பது உண்மைதான். ஆனால் தற்போதைய எனது உடல்திறன் எனக்கு திருப்தி அளிக்கிறது.

ஐபிஎல் 5 தொடரை பொறுத்த வரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் கெளதம் கம்பிர் சிறப்பாக செயல்படுகிறார். எனவே இந்த ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை கைப்பற்ற வாய்ப்புள்ளது என்றார்.

0 comments:

Post a Comment

 
Related Posts Plugin for WordPress, Blogger...