Wednesday, 7 March 2012

முத்தரப்பு தொடரின் கோப்பை யாருக்கு? ஆஸ்திரேலியா, இலங்கை இடையே நாளை மோதல்

Watson and Jayawardene

அடிலெய்ட்: முத்தரப்பு ஒருநாள் தொடரின் கடைசி மற்றும் 3வது இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா,இலங்கை அணிகள் நாளை மோத உள்ளன. சம பலம் கொண்ட இரு அணிகளும் மோத உள்ளதால், நாளைய போட்டியில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடரின் கடைசி போட்டி (3வது இறுதிப் போட்டி) நாளை அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் 3வது முறையாக மோத உள்ளன. கடந்த 2 இறுதிப் போட்டிகளில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருப்பதால், நாளை வெற்றிப் பெறும் அணி கோப்பையை கைப்பற்றும்.

ஆஸ்திரேலியா அணி:

ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் மைக்கேல் கிளார்க்கிற்கு இடது தொடை எலும்பில் ஏற்பட்ட காயம் காரணமாக நாளைய போட்டியில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் பேட்டின்சன் காயம் காரணமாக விளையாடுவது சந்தேகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த வீரர்களுக்கு பதிலாக ஜார்ஜ் பலே, நாதன் லயிட் ஆகியோர் அணியில் சேர்த்து கொள்ளப்பட்டுள்ளனர். மைக்கேல் கிளார்க்குக்கு பதிலாக ஷான் வாட்சன் கேப்டனாக செயல்படுவார். கிளார்க்குக்கு பதிலாக பேட்ஸ்மேன் பீட்டர் பாரஸ்ட்டை அணியில் சேர்க்க வாய்ப்புள்ளது.

ஆஸ்திரேலியாவை பொறுத்தவரை கடந்த 2 இறுதிப் போட்டிகளில் பந்துவீச்சு சிறப்பாக அமையவில்லை. இதனால் பேட்ஸ்மேன்களை நம்பியே ஆஸ்திரேலியா களமிறங்க உள்ளது. இத்தொடரில் டேவிட் வார்னர் 2 சதங்களை அடித்துள்ளார். அவருடன் ஹஸ்ஸி சகோதரர்களும் மற்ற வீரர்களும் அதிரடியில் மிரட்டினால் ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் கோப்பையை கைப்பற்றலாம்.

இலங்கை அணி:

இலங்கை அணியில் பேட்டிங், பந்துவீச்சு ஆகிய 2 பிரிவும் சிறப்பாக உள்ளது. பேட்டிங்கில் இத்தொடரில் 2 சதங்களை அடித்துள்ள தில்ஷன் இருப்பது அணிக்கு கூடுதல் பலம். அவருடன் கேப்டன் ஜெயவர்த்தனே, சந்திமால், சங்கக்காரா ஆகியோரும் இணைந்தால் அணி எளிதாக இமாலய ஸ்கோரை எட்டிவிடலாம்.

ஆல்-ரவுண்டர் ஆஞ்சிலோ மேத்யூஸ் நாளை ஆடுவரா என்ற சந்தேகம் நீடிக்கின்றது. பந்துவீச்சில் மலிங்கா சிறப்பாக செயல்பட்டு வருகின்றார். ஆஸ்திரேலிய பந்துவீச்சில் உள்ள தொய்வு, கேப்டன் கிளார்க்குக்கு ஓய்வு ஆகியவை இலங்கைக்கு சாதகமாக உள்ளது.

இரு அணிகளும் சம பலம் கொண்டவை என்பதால் நாளைய போட்டியில் விறுவிறுப்பிற்கு குறைவு இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

0 comments:

Post a Comment

 
Related Posts Plugin for WordPress, Blogger...